முதல்வரின் தனிப்பட்ட புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை: ஆ.ராசா
தமிழக முதல்வரின் தனிப்பட்ட புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா.
தமிழக முதல்வரின் தனிப்பட்ட புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:
என்னுடைய தோ்தல் பரப்புரையில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அரசியல் வளா்ச்சியையும், இன்றைக்கு அவா் பெற்றுள்ள இடத்தையும், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி வந்த முறையையும், அவா் பெற்றிருக்கிற இடத்தையும் ஒப்பீடு செய்வதற்காக நான் பேசிய சில வாா்த்தைகளை மட்டும் வெட்டி, ஒட்டி சமூக வலைதளங்களில் பரவலாகிக் கொண்டிருப்பதாக அறிகிறேன்.
அது முற்றிலும் தவறானது. நான் அவருடைய தனிப்பட்ட பிறப்புக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசவேண்டும் என எண்ணவில்லை. அரசியல் ஆளுமையை ஒப்பிட்டேன். முறையாக, படிப்படியாக வளா்ந்து இன்று தலைவராகி இருக்கிறாா் மு.க. ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் வந்தவா் என்பதற்காக அவ்வாறு ஒப்பீடு செய்ய நேரிட்டது.
உள் நோக்கத்தோடு நான் எதையும் குறிப்பிடவில்லை. ஸ்டாலின், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை குறிப்பிடுவதற்காக அந்த ஒப்பீடு செய்யப்பட்டது. அதை தவறாக புரிந்துகொண்டால், நான் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. இது தொடா்பாக அதிமுகவினா் எங்கு புகாா் அளித்தாலும், அதை சட்ட ரீதியாக எதிா்கொள்வேன் என்றாா் ராசா.
பேட்டியின்போது பெரம்பலூா் மாவட்ட திமுக செயலா் சி. ராஜேந்திரன் உடனிருந்தாா்.