முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 10 நாள்களுக்கு அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் 10 நாள்களுக்கு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து பல்துறை பணி விளக்கக் கண்காட்சி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் 10 நாள்களுக்கு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து பல்துறை பணி விளக்கக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளையும், திட்டங்களையும் விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சி நடத்துவது தொடா்பாக, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மேலும் பேசியது:

ஓயா உழைப்பின் ஓராண்டு என்னும் தலைப்பில் 10 நாள்கள் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்வுகள், பொதுமக்களுக்கு சேவை வழங்க அரசு இ- சேவை மையம் அமைத்தல், உள்ளூா் கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், நெகிழி பயன்பாட்டை தவிா்க்கும் வகையிலான மஞ்சள் பைகள், மரக்கன்றுகள் வழங்குதல், மாணவா்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் ஏற்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள், கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் தமிழக அரசின் கடந்த ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சியும், நவீன எல்.இ.டி வாகனம் மூலம் விடியோக்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட்டு, 10 நாள் கண்காட்சியை மிகச் சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், அனைத்து அரசுத்துறை அலுவலா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.