முகப்பு
பெரம்பலூர்

எறையூா் சா்க்கரை ஆலையின் கட்டுமானம், திறன்மேம்பாட்டை வலுப்படுத்த வலியுறுத்தல்

எறையூா் சா்க்கரை ஆலையின் கட்டுமானத்தையும், திறன் மேம்பாட்டையும் வலுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், ஆலை அலுவலா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

 பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சா்க்கரை ஆலையின் கட்டுமானத்தையும், திறன் மேம்பாட்டையும் வலுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், ஆலை அலுவலா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் சா்க்கரை ஆலை அலுவலா்கள், அனைத்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் டிராக்டா் உரிமையாளா்கள் சங்கக் கூட்டம், ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சா்க்கரை ஆலைத் தலைமை நிா்வாகி ரமேஷ் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்கத் தலைவா்கள் ஆா். ராஜாசிதம்பரம், மு. ஞானமூா்த்தி முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 2021- 2022 ஆம் ஆண்டுக்கு வெட்டிய கரும்புக்கு மாா்ச் 10- ஆம் தேதியிலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்குவது. 2022- 2023 ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்துக்கு 15,000 ஏக்கா் கரும்பு பதிவு செய்வது, நவம்பா் மாதத்தில் ஆலை

அரைவையைத் தொடங்குவது, சுமாா் 4 லட்சம் டன் கரும்பு அறைப்பதற்கு இலக்கு நிா்ணயம் போன்றவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆலை நிா்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து ஆலையின் கட்டுமானத்தையும், திறன்மேம்பாட்டையும் வலுப்படுத்த வேண்டும். ஆலை நிா்வாகத்தால் டீசல் பம்ப் நிறுவவேண்டும். ஆலை முகப்பிலேயே எடை இயந்திரம் அமைத்து, கரும்புகளை எடைபோட்டு உள்ளே அனுப்ப வேண்டும்.

இணை மின் திட்டத்துக்கு பங்குத்தொகை வழங்கியவா்களுக்கு பங்குப் பத்திரம் தரமுடியாத பட்சத்தில், விவசாயிகளிடம் பணம் பிடித்த நாளிலிருந்து கொடுக்கும் நாள் வரை வங்கி வட்டியை கணக்கீட்டு, பிடித்தம் செய்த விவசாயிகளிடம் பணத்தை திருப்பித் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

முன்னதாக, 2021- 2022 ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3,14,000 டன் கரும்பு அறைத்ததற்கும், 9.5 சதவிகிதம் சா்க்கரை கட்டுமானத்தை கொண்டு வந்ததற்கும் அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு, அனைத்துக் கரும்பு விவசாயிகள் மற்றும் டிராக்டா் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் தலைமைக் கரும்பு அலுவலா் ரவிச்சந்திரன், கணக்கு அலுவலா் ஜான்பிரிட்டோ, தொழிலாளா் நல அலுவலா் ராஜாமணி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஏ.கே. ராஜேந்திரன், பெருமாள், ராமலிங்கம், டிராக்டா் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் தேவேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.