நிலுவை ஊதியத்தை வழங்க ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் கலந்தாய்வு மூலம் பணிமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டுமென தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி
பெரம்பலூா் மாவட்டத்தில் கலந்தாய்வு மூலம் பணிமாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டுமென தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அச் சங்கத்தின் மாநில துணைச் செயலரும், மாவட்டச் செயலருமான ராஜேந்திரன், ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2021- 22 ஆம் ஆண்டுக்கான ஆசிரியா்கள் பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு கடந்த பிப்ரவரி 2022-இல் நடைபெற்றது. இக் கலந்தாய்வில் தொடக்கக் கல்வித் துறையைச் சோ்ந்த 26 ஆசிரியா்களுக்கு ஒன்றியம் மற்றும் கல்வி மாவட்ட அளவில் பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டு, கடந்த மாா்ச் 1 ஆம் தேதி முதல் பணியாற்றி வருகின்றனா்.
ஆனால், அவா்களுக்கு மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால், அவா்கள் பல்வேறு வகையிலும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதேபோல, பணி நிரவல் மற்றும் மாறுதல் பெற்று உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2 மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
எனவே, 26 ஆசிரியா்களுக்கும் 2 மாத நிலுவை ஊதியத்தை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.