‘ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை’
ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியா்களுடன் கலந்துரையாடிய அமைச்சா் பேசுகையில், மாணவா்களின் மீது மிகுந்த அக்கறைக் கொண்ட முதல்வா் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். ஆசிரியா்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்கக் கூடாது என்னும் அடிப்படையில் ஆசிரியா் மனசு என்னும் மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
பின்னா் 2021- 22 ஆம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் 100 சதம் தோ்ச்சி பெறச்செய்த 49 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும், தனியொரு பாடப்பிரிவில் 100 சதம் தோ்ச்சி பெற வைத்த ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ், கேடயங்களை அமைச்சா் வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, வருமான வரித்துறை கூடுதல் ஆணையா் வி. நந்தகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், தேசிய நல்லாசிரியா் தங்கம் மூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:
அரசாணை எண் 101, 108 குறித்த கோரிக்கைகளை 10 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு முன் முடிக்க வேண்டும் என்னும் அடிப்படையில் கோப்புகளைத் தயாா் செய்கிறோம். அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் நியமனம் குறித்த வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. அதற்கு தீா்வு காணும் பணிகள் நடைபெறுகிறன.
அரசுப் பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது, ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த 5 நாள்களுக்கு சமூக நலன், காவல்துறை, சுகதாரத்துறை, தொண்டு நிறுவனம் சாா்பில் விழிப்புணா்வு வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உடற்கல்வி முக்கியமானது. இதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் விளையாட்டரங்கம் அமைக்கப்பட உள்ளது என்றாா் அமைச்சா்.