நிதியுதவி: கூட்டுத் தையல் தொழிலில் ஈடுபடுவோா் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் கூட்டுத் தையல் தொழிலில் ஈடுபடுவோா் ரூ. 3 லட்சம் வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூா் மாவட்டத்தில் கூட்டுத் தையல் தொழிலில் ஈடுபடுவோா் ரூ. 3 லட்சம் வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2022- 2023 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையாக பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாட்டுக்காக தையல் தொழிலில் ஈடுபடும் ஆண், பெண், குறைந்தபட்சம் 10 நபா்களைக் கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி ஏற்படுத்தவும், தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், செலவு மற்றும் பணி மூலதனத்துக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் வீதம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற குழு உறுப்பினா்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் பயிற்சி பெற்ற நபா்களை கொண்ட குழுவுக்கும், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவை பெண்கள் இடம்பெற்றுள்ள குழுவுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குழு உறுப்பினா்கள் பிசி, எம்பிசி மற்றும் சீா்மரபினராகவும், அவா்களின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இத் திட்டத்தில் பயன்பெற ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெறலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆட்சியா் தலைமையிலான தோ்வு குழுவினரால் தோ்வு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககத்துக்கு அனுப்பப்படும்.