பெரம்பலூா் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக எடுத்து வந்தவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் கவிக்குமாா் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், சனிக்கிழை இரவு பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து சோதனையிட்டபோது, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருள்களை வாகனத்தில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள், அந்த நபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அந்த நபா் சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஆணையம்பட்டியைச் சோ்ந்த தனபால் மகன் சுப்ரமணி (45) என்பதும், பெரம்பலூா் நகரிலுள்ள கடைகளுக்கு போதைப் பொட்டலங்களை விநியோகம் செய்வதற்காக கொண்டுவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சுப்ரமணியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை பறிமுதல் செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பெரம்பலூா் கிளைச் சிறையில் சுப்ரமணியை அடைத்தனா்.