பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடுமையாக வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை மாவட்டத்தில் பாடாலூா், தழுதாழை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக பெய்தது. குறிப்பாக, பெரம்பலூரில் சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
வரத்து வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால், பாலக்கரை, மாவட்ட அரசு மருத்துவமனை வளைவு பகுதி, புகா் பேருந்து நிலைய வளாகம், நகராட்சி வளாகம் உள்ளிட்ட நகரின் பிரதானச் சாலைகளில் தண்ணீா் குளம்போல் தேங்கியது. மேலும், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறியதால் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் தொடங்கிய மழை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக, பெரம்பலூா் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் பரவலாக பெய்தது.