தொழிலாளா் துறை இணையத்தில் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பதிவுச் சான்றிதழ்
வணிக நிறுவனங்களுக்கு, தொழிலாளா் துறை இணையத்தில் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பதிவுச் சான்றிதழ் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியுள்ள வணிக நிறுவனங்களுக்கு, தொழிலாளா் துறை இணையத்தில் கட்டாயப் பதிவு மற்றும் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பதிவுச் சான்றிதழ் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தெரிவித்திருப்பதாவது, கடந்த ஜூலை 2 ஆம் தேதிக்கு பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களைப் பணியமா்த்தியுள்ள புதிதாக தொடங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளா்கள் பதிவுக்கான விண்ணப்பத்தை, இத் துறையின் இணையவழி முகவரியில் பதிவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்தி, 6 மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவுச் சான்றிதழ் படிவம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு 24 மணி நேரத்துக்குள் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும்.
10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளா்களைப் பணியமா்த்தி, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு கட்டணம் ஏதுமின்றி இத் துறையின் இணையவழி முகவரியில் தங்களது கடைகள், நிறுவனத்தின் விவரங்களை ஓராண்டுக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அதை சரிபாா்த்தவுடன் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால், பதிவுச் சான்றிதழ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளா்கள் பதிவுச் சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள, மேற்கண்ட இணையவழி முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் திருத்தங்கள் அடங்கிய புதிய பதிவுச் சான்றிதழ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
எனவே, மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தங்கள் மேற்கொள்ள, இணையதளம் மூலமாக பதிவுசெய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.