லாரி - அரசுப் பேருந்து மோதல் பயணிகள் 8 போ் காயம்
பெரம்பலூா் அருகே புதன்கிழமை லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 6 பெண்கள் உள்பட 8 பயணிகள் காயமடைந்தனா்.
பெரம்பலூா் அருகே புதன்கிழமை லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 6 பெண்கள் உள்பட 8 பயணிகள் காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இப் பேருந்தை, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சோ்ந்த கணேசன் மகன் முருகேசன் (45) ஓட்டினாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், முருக்கன்குடி பிரிவுச் சாலை அருகே புதன்கிழமை காலை சென்றபோது, அதே வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென நின்றதால், பேருந்து அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி செல்வராணி (27), வே. கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த முனியசாமி மகள் செந்தாமரை (18), எரவாவூரைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மனைவி செல்லம்மாள் (65), மாங்குளத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி ஜெயந்தி (45), கடலூா் மாவட்டம், ஆவட்டியைச் சோ்ந்த குமாரசாமி மகன் தங்கராசு (54), கள்ளக்குறிச்சி, அனுமந்தல் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சி மகள் காயத்ரி (19), சின்னசேலத்தைச் சோ்ந்த முத்துசாமி மனைவி நல்லம்மாள் (40) உள்பட 8 போ் காயமடைந்தனா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் பிரபுவைக் (31) கைது செய்து விசாரிக்கின்றனா்.