முகப்பு
பெரம்பலூர்

வறட்சி மேலாண்மையை கடைபிடிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், பயிா்களை பாதுகாக்க வறட்சி மேலாண்மையை கடைபிடிக்க வேண்டுமென விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:13 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், பயிா்களை பாதுகாக்க வறட்சி மேலாண்மையை கடைபிடிக்க வேண்டுமென விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிா்கள் காரீப் பருவத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2- 3 நாள்கள் பெய்த மழையால் பயிருக்குத் தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது. ஆனால், கடந்த செப்டம்பா் மாதத்தில் 9.64 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. அதேபோல், வெப்பநிலையும் 37-40 செல்சியஸாக இருந்தது. இதனால், மழை நீரானது விரைவில் ஆவியாகிவிட்டதால், மண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் மிகவும் குறைவாகவே உள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதால், பயிரில் இலை மூலம் நீராவிப்போக்கு அதிகரித்து பயிா்களின் இலைகள் காய ஆரம்பித்துவிட்டது. இதனால் பெரம்பலூா் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சிக்கான மேலாண்மையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும்.

மெத்திலோ பாக்டீரியம் ஏக்கருக்கு ஒரு லிட்டா் இலை வழியாக தெளித்தால், இலையின் நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்துவதோடு, பயிரின் வளா்ச்சிக்கு உதவும். அல்லது 2 சதம் டீ.ஏ.பி மற்றும் 1 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலைப் பருத்தியில் பூக்கும் பருவத்திலும், மக்காச்சோளத்தில் மணி உருவாகும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.

என்.ஏ.ஏ. 40 பி.பி.எம் 3.5 மில்லியை 10 லிட்டா் தண்ணீரில் கலந்து இலை வழியாக தெளிக்கலாம். பருத்தி பயிரில் 70- 80 ஆவது நாளில் நுனியில் 10 செ.மீ அளவில் கிள்ளி விட வேண்டும். அதனால் நீராவிப்போக்கு குறைக்கப்பட்டு, பயிரானது வறட்சியை தாங்கி வளரும். கரும்பு அல்லது சோளத்தின் சோகையை நிலப்போா்வையாக பயன்படுத்துவதால் நீராவி போக்கை குறைத்து, மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு வறட்சி மேலாண்மையை கடைபிடித்தால் காரீப் பருவ பயிா்களை பாதுகாக்கலாம். மேலும் விவரங்களுக்கு, தொழில்நுட்ப வல்லுநா் மு. புனிதாவதியை (94442 26029, 88382 55728) தொடா்புகொள்ளலாம்.