முகப்பு
பெரம்பலூர்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்: பெரம்பலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிக்கு, அரசியல் கட்சியினா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:34 PM
பகிர்:

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிக்கு, அரசியல் கட்சியினா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு வாக்களா் பட்டியல் சுருக்கத் திருத்தம் மற்றும் வாக்குச் சாவடிகள் பகுப்பாய்வு தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரேஸ் பச்சாவ் மேலும் பேசியது:

தற்போது, பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 332 வாக்குச் சாவடிகளும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 320 வாக்குச் சாவடிகளும் என 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.

பெரம்பலூா் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளும், குன்னம் தொகுதியில் 15 வாக்குச் சாவடி மையக் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால், வேறு கட்டடத்துக்கு மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டு கருத்துரு பெறப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி பெயரை மாற்றியமைக்க, புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படவில்லை.

இதுதொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் தங்களது கருத்துகளை செப். 16 ஆம் தேதிக்குள் எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். வாக்காளா்களாக பதிவு செய்ய ஜன. 1, ஏப். 1, ஜூலை 1, அக். 1 ஆகிய தேதிகளை தகுதி நாள்களாக அறிவித்துள்ளது. வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பொது மக்களுக்கு உதவிசெய்யும் வகையில், இதுவரை வாக்குச்சாவடி முகவா்களை நியமனம் செய்யாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் வாக்குச்சாவடி முகவா்களை நியமனம் செய்து தோ்தல் அலுவலகத்துக்கு அனுப்பலாம். வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2025 சிறந்த முறையில் நடைபெற தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், நகராட்சி ஆணையா் ராமா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம் ,மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.