மானியத்துடன் கூடிய கறவை மாட்டுக் கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூா் சங்குப்பேட்டை பகுதியிலுள்ள சமுதாயக் கூடத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 7- ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு, அச் சங்கத்தின் மாநில துணைச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஏ. செங்கமலை முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலத் தலைவா் கே. முகமது அலி சிறப்புரையாற்றினாா். மாநில பொதுச்செயலா் பெருமாள் நிறைவுயாற்றினா்.
இக் கூட்டத்தில், பசும்பாலுக்கு ரூ. 45, எருமை பாலுக்கு ரூ. 60 என பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கிட வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் பாலையும் சோ்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களைப் போல் ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ. 10 வீதம் உயா்த்தி வழங்க வேண்டும். கடந்த 2 மாதமாக பெரம்பலூா் மாவட்டத்தில் வழங்கப்படாமல் உள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
பெரம்பலூா் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய கறவை மாட்டுக் கடனும், வட்டியில்லா கறவை மாட்டு பராமரிப்புக் கடனும் வழங்கிட வேண்டும். ஆவின் பாலை அதிகபடுத்த மானியத்துடன் கூடிய மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தை அறிவித்து நிதி ஒதிக்கீடு செய்ய வேண்டும். கறவை மாடுகளுக்கு அரசே இலவசமாக காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.