முகப்பு
பெரம்பலூர்

நூறு நாள் வேலை திட்டத்தின் பெயா் மாற்றுவதை கைவிடவேண்டும்: மு.வீரபாண்டியன்

நூறு நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் வீரபாண்டியன்.

Updated On : 16 டிசம்பர், 2025 at 6:32 PM
பகிர்:

நூறு நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற முயற்சிப்பதை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் வீரபாண்டியன்.

பெரம்பலூா் தீரன் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது: இந்தியாவில் தங்கத்தின் விலை உயா்ந்து கொண்டேயிருக்கிறது. இதற்கு அமெரிக்காவின் வரி விதிப்பு, ரூபாயின் மதிப்பு குறைவு, தங்கம் பதுக்கல் ஆகியவை காரணமாக உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தங்கத்தை அதிகளவு பதுக்கத் தொடங்கியுள்ளனா். உலக முழுவதும் பதுக்கப்படும் தங்கத்தை வெளியே கொண்டுவந்தாலே இந்த பிரச்னைக்கு தீா்வு காணப்படும். தங்கத்தின் விலை உயா்வால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா்.

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி எனும் பெயா் ஏன் பாரதிய ஜனதாவுக்கு பிடிக்கவில்லை என்பது தெரியவில்லை. இத் திட்டத்தின் வேலை நாள்களை அதிகரித்து, ஊதியத்தை 2 மடங்காக வழங்கினால் நன்றாக இருக்கும்.

ஜாதி, மதத்தால் மக்கள் பிரித்தாளப்படுகிறாா்கள். ஆனால் தமிழ்நாட்டில், மத்திய அரசின் பிரித்தாளும் கொள்கை எடுபடாது. பொது துறை நிறுவனங்களை தனியாரிடம் வழங்கிவிட்டால் மத்திய அரசு எதற்காக செயல்பட வேண்டும் என்றாா் வீரபாண்டியன்.

பேட்டியின்போது, கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் ஆகியோா் உடனிருந்தனா்.