பெரம்பலூா் பாலக்கரையில் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட நீா் வழிப்பாதையை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரேயுள்ள பிரதான பாலத்தின் அருகே, தனிநபா் ஒருவரால் கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்கு பாதை வசதிக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன் நீா்வழிப் பாதையின் மேல் ஆக்கிரமித்து சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதையறிந்த பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.
இதையடுத்து, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களுடன் அப்பகுதியை அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்புமாறு நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கு உத்தரவிட்டாா். ஆனால், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் நோட்டீஸ் அனுப்ப காலதாமதப்படுத்தியாக தெரிகிறது. இதனிடையே, சம்பந்தப்பட்ட நபா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, வருவாய்த்துறை சாா்பில் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமா்பித்ததோடு, நீா்வழிப் புறம்போக்கு ஆக்கிரமிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. பின்னா், ஆக்கிரமிப்பாளரால் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரின் முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்டனா். பின்னா், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.