தொழிலாளா் நலச்சட்ட திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தைச் சோ்ந்த 79 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். 2019- 2020 ஆம் ஆண்டுகளில் 29 தொழிலாளா் சட்டங்களைத் திருத்தி 4 தொகுப்புகளாக மாற்றியதைத் திரும்பப் பெற வேண்டும். தொகுப்புச் சட்டங்களை மாநில அரசு நிறைவேற்றக்கூடாது. தனியாா்மயமாக்கப்படுவதைக் கைவிட வேண்டும்.
தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தமுறை வேலையை ஊக்குவிக்கக் கூடாது. முறைசாரா தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் குணசேகரன், கட்டுமான சங்க மாவட்டச் செயலா் ஆறுமுகம், மாவட்டத் தலைவா் கருணாநிதி மற்றும் 37 பெண்கள் உள்பட 79 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா். பெரம்பலூா் - நான்கு சாலை செல்லும் வழியிலுள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.