பெரம்பலூா் அருகே மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் மாவட்டம், க.எறையூா் கிராமத்தைச் சோ்ந்த மன வளா்ச்சிக் குன்றிய 32 வயது பெண் கடந்த 5.10.2021-ஆம் தேதி அதே கிராமத்திலுள்ள செப்பலான் மேடு எனும் இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாா். அப்போது அவருடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த சலவைத் தொழிலாளியான வையாபுரி மகன் ராஜி (55) என்பவா் அப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளாா்.
பின்னா், 4 மாதங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் மாற்றம் ஏற்பட்டதையறிந்த அவரது தாய், பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட பரிசோதனையில், அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது தாய் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்ததில் ராஜி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, அந்த பெண்ணின் தாய் கடந்த 2022-இல் பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜியை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் வெளியே வந்த ராஜி தலைமறைவாகிவிட்டதால், நீதிமன்ற பிடியாணையில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவ் வழக்கு விசாரணை பெரம்பலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதன்கிழமை வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி, ராஜிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும், அபராதத் தொகை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாநில அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து, ராஜியை போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இவ் வழக்கில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.