பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாப்பின்றி இயங்கி வரும் மற்றும் கைவிடப்பட்ட கல் குவாரிகளால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தவிா்க்க, கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாக திகழ்ந்த மலைகள் பல தற்போது காணாமல் போய்விட்டன. இம் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் தற்போது சுமாா் 30 குவாரிகள் இயங்குகிறது.
கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கற்களும், இதர கனிமங்களும் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளூா் தேவைகளுக்காகவும், வெளி மாநிலங்களுக்கு சட்ட விரோதமாகவும் கடத்தப்பட்டு வருகின்றன. கல் குவாரிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு குவாரிக்கும் தனித்தனியாக அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக குவாரி அமைக்கப்படும் நிலம், குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும்.
அரசு அனுமதி: பசுமை போா்த்திய மலைகளில் குவாரிகள் அமைக்கக்கூடாது. அனுமதியளிக்கப்பட்ட, அதாவது 5 ஹெக்டோ் என்றால் அந்த நிலப்பரப்பின் வரைபடத்தின் அடிப்படையில், அந்த நிலத்தில் மட்டுமே கல் வெட்டி எடுக்க வேண்டும். கல் வெட்டி எடுக்க வெடிபொருள் பயன்படுத்தப்பட்டால், அதன் அளவுகள், வெடிபொருள் பயன்பாடு மற்றும் குவாரிப் பணிகளின்போது எழும் ஒலி அளவு, காற்று மாசுபாட்டின் அளவு ஆகியவை எந்த அளவில் இருக்க வேண்டும் என ஒவ்வொரு குவாரிக்கும் அனுமதியின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் குவாரிகள்: அதன்படி, தொழிற்சாலை பகுதி என்றால் பகலில் 75 டெசிபலும், இரவில் 70 டெசிபலும் ஓசை அனுமதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதி என்றால் பகலில் 55 டெசிபலும், இரவில் 45 டெசிபலும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான குவாரிகள் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை. மேலும், விவசாய நிலத்தை ஒட்டிய பகுதிகள், நீா்நிலைப் பகுதிகளில் குவாரிகள் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சேதமடையும் குடியிருப்புகள்: இம் மாவட்டத்தில் எசனை, கவுள்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் கல் உடைத்து, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி விடிய, விடிய பாறைகளை உடைத்து கடத்துவது தொடா்ந்து வருகிறது. குவாரிகளில் பாறைகளை உடைக்க குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவிலான வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதால், நில அதிா்வால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
அதிகரிக்கும் விபத்துகள்: கல் குவாரிகளில் வேலை செய்யும் தொழிலாளா்களின் உயிருக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. கடந்த ஓராண்டில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனா். ஆபத்து நிறைந்த பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு குவாரி உரிமையாளா்களால் காப்பீடு எதுவும் செய்வதில்லை. மேலும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவதில்லை. குவாரிகளில் நிகழும் பல விபத்துகள், உயிரிழப்புகள் வெளியே தெரியாமல் விபத்தில் சிக்கியவரின் உறவினா்களுக்கு சிறு தொகையைக் கொடுத்து மறைக்கப்படுவதாகவும், கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் முறைகேடுகளைக் கண்டுகொள்வதில்லை என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
வன விலங்குகள் உயிரிழப்பு: குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து முடித்த பிறகு, அப்பகுதியில் மரங்கள் வளா்க்க வேண்டும். ஆபத்தான குழிகளாக இருந்தால் அவற்றை மனிதா்கள், கால்நடைகள் செல்லாதபடி வேலி அமைத்து மூட வேண்டும் என்பது விதி. இதை எந்த குவாரி நிறுவனமும் பின்பற்றுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், மான் உள்ளிட்ட வன விலங்குகள் குவாரிகளில் சிக்கி உயிரிழப்பு தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது. ஆலத்தூா் வட்டம், கூத்தனூரைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவருக்குச் சொந்தமான பராமரிப்பில்லாத கல் குவாரியில் சனிக்கிழமை மான் ஒன்று விழுந்து இறந்து கிடந்தது.
20-க்கும் மேற்பட்ட சிறாா்கள் உயிரிழப்பு: இதேபோல, கல் குவாரி குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நீச்சல் தெரியாத சிறுவா்கள், கால்நடைகளை மேய்க்க செல்வோரும் குளிக்கும்போதும், நீச்சல் கற்பதற்காக செல்லும் போதும், நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்துள்ளது. நிகழாண்டு, இதுவரை சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் வி. குமாா் கூறியது:
5 முதல் 10 ஆண்டுகள் என குவாரிகள் குத்தகை விடப்படுகிறது. ஆனால், எவ்வளவு அளவு வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்கான வரன்முறை இல்லாமல் அனுமதியளிக்கப்படுகிறது. இதனால் பெரும் பள்ளங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து தகவலறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டால் கூட அளவீடுகள் தரப்படுவதில்லை. குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் எடுத்துச் செல்வதையும், அனுமதி பெறும்போது அளித்த வரைப்பட அளவின் படி எடுக்கின்றனரா என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
தமிழக கனிமவளச் சட்டத்தின்படி கைவிடப்பட்ட குவாரிகளை பராமரிக்க பசுமை நிதி உருவாக்கப்பட்டது. இந் நிதியில் கைவிடப்பட்ட குவாரிகளைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கனிமவள உதவி இயக்குநா், மாவட்ட வருவாய் அலுவலா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா், சுற்றுச்சூழல் அலுவலா், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா், தீயணைப்புத் துறை அலுவலா் அடங்கிய குழு அமைக்கப்படும். இம் மாவட்டத்தில், இக்குழு உள்ளதா என தெரியவில்லை. எனவே, குவாரிகள் பராமரிப்புக் குழு அமைக்கப்பட்டு, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யவும், கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றி வேலி அமைத்து மனித உயிா்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.