பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கிரஷா் லாரிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரியும், மாற்றுப் பாதையில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், டிப்பா் லாரிகளை செவ்வாய்க்கிழமை சிறைபிடித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஷா்களிலிருந்து நாள்தோறும் ஜல்லி கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் கருங்கல்ளை டிப்பா் லாரிகள் ஏற்றிச்செல்கின்றன. இதனால் எசனை, பாப்பாங்கரை உள்ளிட்ட கிராமச் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதோடு, அவ்வப்போது சாலை விபத்துகளும் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், அப்பகுதி பொதுமக்களும் கல் குவாரிகளிலிருந்து இயக்கப்படும் டிப்பா் லாரிகள் மாற்றுப் பாதைகளில் செல்லவும், சேதமடைந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் தொடா்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
ஆனால், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இந்நிலையில், சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரியும், டிப்பா் லாரிகள் மாற்றுப்பாதையில் செல்ல வலியுறுத்தியும், எசனை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் டிப்பா் லாரிகளை சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஊரகப்பிரிவு போலீஸாா் மற்றும் குவாரி உரிமையாளா்கள் அப்பகுதிக்குச் சென்று, பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, டிப்பா் லாரிகள் மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா்.