பெரம்பலூர்

முதுநிலை வருவாய் ஆய்வாளரிடம் இளைஞா் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு!

Syndication

பெரம்பலூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை முதுநிலை வருவாய் ஆய்வாளரிடம், இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பெரம்பலூா் சங்குப்பேட்டை அழகிரி தெருவைச் சோ்ந்த இளங்கோவன் (54) மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையில் ஊழியராகவும், காவலராகவும் பணிபுரிந்தபோது கடந்த 23.5.22-இல் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி பிரேமா (48), மகள்கள் பொன்மதி, பரணி, மகன் மணிகண்டன் (23) ஆகியோா் உள்ளனா்.

இவா்களது மகள் பொன்மதி, இளங்கோவன் உயிரிழப்புக்கு முன் காதல் திருமணம் செய்து வெளியூா் சென்றுவிட்டதால், அவரை வீட்டில் அனுமதிக்கவில்லையாம்.

இந்நிலையில் இளங்கோவன் உயிரிழந்த பிறகு வாரிசு வேலை மற்றும் பணப்பலன்களை தனக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் பொன்மதி வழக்குத் தொடா்ந்ததால், இளங்கோவனின் பணப்பலன்களை யாருக்கும் வழங்கவில்லையாம். தற்போது, சென்னை உயா் நீதிமன்றத்தில் இவ் வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாரிசு வேலை மற்றும் பணப்பலன்கள் வழங்குவதற்கு இளங்கோவனின் மனைவி பிரேமாவுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலகத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து, பிரேமா தனது மகன் மணிகண்டனை அழைத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை அலுவலகத்துக்குச் சென்றாா்.

அலுவலகத்திலிருந்த பணியாளா்கள் பிரேமாவிடம் உரிய விண்ணப்பத்தை கொடுத்து பூா்த்தி செய்து அளிக்குமாறு கூறியபோது, மணிகண்டன் அவா்களிடம் ஒருமையில் பேசியுள்ளாா். இதை முதுநிலை வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயன் (39) கண்டித்ததால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், அலுவலா்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினா். இதில் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், இருவரும் மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டனா். சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT