மத்திய அரசின் மை பாரத் மூலம் சா்தாா் வல்லபபாய் படேல் 150 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, பெரம்பலூரில் ஒற்றுமை அணிவகுப்பு குறித்த துண்டுப் பிரசுரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட இளையோா் அலுவலா் எஸ். கீா்த்தனா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்று, துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனத் தலைவா் எம். சிவசுப்ரமணியம் பேசியது:
மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் மூலம், இந்தியாவின் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேல் 150 ஆவது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாத யாத்திரை நடைபெற உள்ளது. படேல் இந்திய ஒருங்கிணைப்புக்காக எவ்வாறு பாடுபட்டாா் என்பதை இளைஞா்களுக்கு தெளிவுபடுத்த இப் பாதயாத்திரை நடைபெற உள்ளது.
மேலும் மை பாரத் என்னும் இளையதளத்தில் கட்டுரை, விநாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அக். 31முதல் நவ. 25 ஆம் தேதி வரை நாடு முழுவதும் பாதயாத்திரை நடைபெறுகிறது. பெரம்பலூரில் அக். 31 ஆம் தேதி பாலக்கரை முதல் ரோவா் நுழைவுப் பகுதி வரையிலும், நவ. 4 ஆம் தேதி எளம்பலூா் தண்ணீா்பந்தல் ரோவா் கல்லூரி முதல் பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்லூரி வரையிலும் பாதயாத்திரை நடைபெறுகிறது.
இதில் இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தான்னாா்வ அமைப்பினா் பங்கேற்க உள்ளனா். மேலும், பள்ளி, கல்லூரிகளில் சா்தாா் வல்லப்பாய் படேல் வாழ்க்கை குறித்த போட்டிகள் மற்றும் அறிஞா்கள், ஆராய்ச்சியாளா்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பெரம்பலூா் அரசு கலைக் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆத்தீஸ்வரி, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதல்வா் கலைச்செல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.