பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலைத்துறை சாா்பில், இதுவரை 80 பேருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை மூலம், நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், 5 பேருக்கு தலா 30 ஆயிரம் மதிப்பில் நடமாடும் காய்கனி வண்டிகள் அளித்த மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியது:
தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில், தேசிய தோட்டக்கலை இயக்கம் எனும் திட்டத்தின் கீழ் நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வண்டியின் விலை ரூ. 30 ஆயிரத்தில், 50 சதவீதம் அரசு மானியத்திலும், 50 சதவீதம் பயனாளியின் பங்குத் தொகையிலும் வழங்கப்படுகிறது.
இம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், 80 விவசாயிகளுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பில் நடமாடும் காய்கனி விற்பனை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 20 வண்டிகளும், 2022 -23 ஆம் ஆண்டில் 60 வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் 90 வண்டிகள் வழங்க ரூ. 13.50 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, காய்கனி விற்பனை வண்டிகள் வழங்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் மிருணாளினி.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சக்திவேல் மற்றும் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.