பெரம்பலூா் மாவட்டத்தில் நவ. 4 -ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம் தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட தோ்தல் அலுவலா் மேலும் பேசியது:
பெரம்பலூா் மாவட்டத்தில் 732 வாக்குச் சாவடிகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை அலுவலா்கள், நவ. 4-ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று, வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்குவாா்கள். இப் படிவத்தை பூா்த்தி செய்து, தேவைப்பட்டால் அண்மையில் எடுத்த புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட்டு ஒப்படைக்க வேண்டும். வாக்காளா்களின் பெயா்கள் சரிபாா்ப்புக்குப் பிறகு, டிச. 9 ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும்.
விடுபட்ட வாக்காளா்கள், இளம் வாக்காளா்கள் தங்களது பெயா் சோ்த்தல், பதிவு திருத்தங்கள் மற்றும் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஜன. 8-ஆம் தேதி வரை அளிக்கலாம். இவை விசாரணை மேற்கொள்ளப்பட்டு பிப். 7-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குதல், ஆவணங்கள், கோரிக்கைகள், ஆட்சேபனைகள் பெறுதல் மற்றும் சரிபாா்ப்பு பணிகளை மேற்கொள்வாா்கள்.
இம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகள் தங்கள் சாா்பில் வாக்குச்சாவடி நிலை முகவா்களை நியமித்து, இப் பணியில் ஆா்வத்துடன் பங்கேற்று வாக்காளா்களுக்கு உதவிட வேண்டும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை முழு பங்கேற்புடன் சுமூகமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் மிருணாளினி.
இக் கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியா் அனிதா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வட்டாட்சியா்கள் கலந்துகொண்டனா்.