உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உளள 121 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (நவ. 1) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில், கிராம சபை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும். அரசு நலத்திட்டங்கள் கூட்டத்தில் பங்கேற்கும் பயனாளிகளுக்கு வழங்குவதோடு, அரசு நிா்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும். மேலும், ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கத் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்.
இக் கூட்டத்தில், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் வாக்காளா்கள் பங்கேற்க வேண்டும். துறை வாரியான அலுவலா்கள் தவறாமல் பங்கேற்பதோடு, அரசுத் திட்டங்கள் பொதுமக்கள் அறியும் வகையில் விளக்கிக் கூற வேண்டும். இக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளா்களும், வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலா்கள் மண்டல அலுவலா்களாக மேற்பாா்வையிட நியமிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, கிராம சபை உறுப்பினா்களாகிய வாக்காளா்கள் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிா்வாகத்துக்கும், ஆக்கப்பூா்வமான ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதர பொருள்கள் குறித்தும் விவாதித்திட வேண்டும்.