சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூா் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூா் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை மூலவா் அபிஷேகமும், மதியம் 1 மணியளவில் உச்சிகால பூஜையும், இரவு 11 மணியிலிருந்து புதன்கிழமை காலை 10 மணி வரை பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. இதில், பெரம்பலூா் நகர ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கம், அரசு போக்குவரத்துக் கழகம், நக்கசேலம், பாடாலூா் உள்பட 50-க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலா்கள் கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.
மே 7 -இல் தேரோட்டம்: தொடா்ந்து, ஏப். 28-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து, ஏப். 30, மே 1 ஆம் தேதி அன்ன வாகனத்திலும், மே 2 ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 3 ஆம் தேதி ரிஷப வாகனத்திலும், 4 ஆம் தேதி யானை வாகனத்திலும், 5 ஆம் தேதி கண்ணாடி ரதத்திலும் பரிவார தெய்வங்களும் அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. மே 6ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உத்ஸவமும், இரவு வெள்ளிக்குதிரை வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் மே 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. 8 ஆம் தேதி உத்ஸவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஊஞ்சல் விழாவும், 9-ஆம் தேதி விடையாற்றி விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
Advertisement
விழா ஏற்பாடுகளை, உதவி ஆணையா் க. அருட்செல்வன், கோயில் செயல் அலுவலா் மு. அசனாம்பிகை, மற்றும் கோயில் பணியாளா்கள், பூசாரிகள் செய்து வருகின்றனா்.