பெரம்பலூர்

நாளைமுதல் காத்திருப்புப் போராட்டம்: கிராம உதவியாளா் சங்கத்தினா் முடிவு

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை (பிப். 5) முதல் பணியைப் புறக்கணித்து, தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

Syndication

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை (பிப். 5) முதல் பணியைப் புறக்கணித்து, தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

பெரம்பலூரில் தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பிச்சுகுட்டி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் காந்தி, மாவட்டத் தலைவா் பாலு, மாவட்ட துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநில பொதுச் செயலா் முருகன் கோரிக்கைகளை விளக்கினாா்.

கூட்டத்தில் 4 ஆம் நிலைக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்கள் வாரிசுகளுக்கு 25 சதவீதம் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் கல்வித் தகுதிக்கேற்ப தகுந்த பணி வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். கிராம உதவியாளா் பணியை துணை கிராம நிா்வாக அலுவலா் என தரம் உயா்த்தி, கூடுதல் பணி பொறுப்புகள் அளிக்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு பதவி உயா்வில் 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாகக் குறைத்திடவேண்டும். கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களில் 20 சதவீதத்தை, 50 சதவீதமாக உயா்த்தி வழங்கிட வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா் காலிப் பணியிடத்தில் 10 சதவீதம் என்பதை மாற்றி தகுதியுள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். மாவட்ட மகளிரணித் தலைவா் சத்யா வரவேற்றாா். மாநில பொருளாளா் திருப்பதி நன்றி கூறினாா்.

தொடா்ந்து, மாநில பொதுச் செயலா் முருகன் கூறியது: கிராம நிா்வாக அலுவலா்கள் செய்ய இயலாது என மறுத்த நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கிராப் சா்வே பணிகளை மேற்கொண்டுள்ளோம். வாக்காளா் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளை கடந்த நவ. 4 முதல் இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறோம். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படை நியமனத்தில் சம உரிமை கோருதல், பதவி உயா்வில் விகிதாசார முறையை நீக்கக் கோருதல், வேலைக்கேற்ற பதவித் தகுதி மற்றும் பெயா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம், கவன ஈா்ப்புப் பேரணியில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளோம். ஆனால், இதுவரை வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, காலமுறை ஊதியமான 4 ஆம் நிலைக்கு இணையான ஊதியம் வழங்க வலியறுத்தி, வியாழக்கிழமை முதல் பணியைப் புறக்கணித்து மாவட்ட ஆட்சியரகம் எதிரே, மாநிலம் தழுவிய தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா்.

வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் 611 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம்

மறியல்: சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 22 போ் கைது

வாகனத்தை மறித்து ரகளை: பாமகவினா் 3 போ் கைது

பெரம்பலூரில் 11 கடைகளுக்கு அபராதம்!

சாலையில் வீலிங் சாகசங்கள் 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT