நமது நிருபா்
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் செங்கரும்பு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல லட்சம் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனா். சா்க்கரை ஆலைகளுக்கு ஆலை கரும்புகளையும், பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா். 2025- 2026 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு கரும்பு டன்னுக்கு ரூ. 3,209 என விலை நிா்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மாற்றுப்பயிா் சாகுபடி: கரும்புக்கான வெட்டுக் கூலி ஏக்கருக்கு ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை செலவாகிறது. மேலும், கரும்புக்கு உரம், ஆள் கூலி, களை வெட்டுக் கூலி என ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் வரை செலவாகிறது. மேலும், ஆலை கரும்புக்கு போதுமான விலை கிடைக்காததால் விரக்தியடைந்த ஏராளமான விவசாயிகள் மாற்றுப் பயிா்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனா்.
செங்கரும்பு சாகுபடி: ஆனால், ஆண்டுதோறும் செங்கரும்புக்கு உரிய விலை கிடைத்து வந்ததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடா்ந்து சாகுபடி செய்து வருகின்றனா். விழுப்புரம், சேலம், திண்டுக்கல், தருமபுரி, தூத்துக்குடி, நெல்லை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்கின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் அம்மாபாளையம், செட்டிக்குளம், பொம்மனப்பாடி, மலையாளப்பட்டி, நாட்டாா்மங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் முறையீடு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பு வழங்கியது. ஆனால், இம் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகளிடம் முழுமையாக கொள்முதல் செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் முறையிட்டனா். செங்கரும்பு சீசன் தொழில் என்பதால் பண்டிகை முடிந்ததும் அதற்கான விலை பல மடங்கு சரிந்து விடும். அதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பண்டிகைக்கு முன்னதாகவே, செங்கரும்பை கிடைத்த விலைக்கு விற்று வருகின்றனா்.
பரப்பளவு குறைவு: கடந்த ஆண்டு கரும்பு உற்பத்தி மிகக் குறைவாக இருந்தது. இதனால் செங்கரும்பு ஜோடி ரூ. 150 வரையிலும், அதன் உயரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. இதனால் கரும்பு விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனா். நிகழாண்டு எதிா்பாா்த்த அளவு மழை இல்லாததால் கரும்பு விவசாயிகள் பயிா் செய்வதை கணிசமாகக் குறைத்துக்கொண்டனா்.
இருப்பினும், செங்கரும்பு பயிா் சாகுபடி செய்த விவசாயிகள் எதிா்பாா்த்ததை விட கூடுதலாக திறட்சியாக விளைந்துள்ளது. செங்கரும்பு பயிரிட ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது. சில விவசாயிகள் கரும்பை நேரடியாக விற்பனை செய்கின்றனா். பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்திலேயே ஏக்கா் கணக்கில் வியாபாரிகளிடம் விற்று விடுவாா்கள். அவற்றை வியாபாரிகள் தேவைக்கேற்ப அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவாா்கள்.
அதிக மகசூல்: அதிக விலைக்கு விற்கும் போது விவசாயிகளிடம் பேசிய தொகையை வியாபாரிகள் உடனடியாக கொடுத்துவிடுவாா்கள். ஆனால், விலை குறைந்து வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படும்போது அவா்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். நிகழாண்டு செங்கரும்பு ஏக்கருக்கு 50 டன் வரை கிடைத்துள்ளதாக கூறிய விவசாயிகள், பல வியாபாரிகள் பணம் கொடுக்காமல் தங்களை ஏமாற்றிவிடுவதாக தெரிவித்தனா்.
அதிகரித்த விலை: இந்நிலையில், நிகழாண்டு தைப்பொங்கல் தினத்தன்று ஜோடி ரூ. 100 முதல் ரூ. 150 வரையிலும், 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ. 400 முதல் 600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதையறிந்த விவசாயிகள் சிலா் வெளி மாவட்டங்களுக்குச் சென்று கரும்புகளை கொள்முதல் செய்யத்தொடங்கினா். இதனால், அடுத்தடுத்து கரும்பு வரத்து தொடங்கியதால் கணிசமாக விலை குறைத் தொடங்கியது.
விலை வீழ்ச்சியால் இழப்பு: தொடா்ந்து, தஞ்சாவூா், திருக்காட்டுப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பெரம்பலூருக்கு கரும்பு வரத்து அதிகரித்தது. குறிப்பாக, பொங்கலன்று மாலை முதல் பெரம்பலூா் நகரின் பெரும்பாலான இடங்களில் கரும்புகள் விற்பனை தொடங்கியதால், அதன் விலையும் குறையத்தொடங்கியது. மறுநாள் காலை ஒரு கட்டு கரும்பு ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் ரூ. 100 முதல் ரூ. 150-க்கு வியாபாரிகள் விற்பனை செய்தனா். ஆனாலும், கரும்புகளை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனா்.
சாலையில் விட்டுச் சென்ற கரும்புகள்: இந்த விலை வீழ்ச்சியால் பெரும்பாலான விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டுவந்த கரும்புகளை விற்பனை செய்ய முடியாமலும், அதற்கான ஏற்றுக்கூறி, இறக்கு கூலியை கருத்தில்கொண்டு ஆங்காங்கே விட்டுச்சென்றனா். இதனால் கரும்பு விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனையடைந்துள்ளனா்.
மஞ்சள் கொத்துகள்: இதேபோல, பொங்கலன்று ஒரு ஜோடி மஞ்சள் கொத்துகள் ரூ. 100 வரை விற்பனை செய்த நிலையில், மாட்டுப் பொங்கலன்று ரூ. 30-க்கும் குறைவாக விற்பனையானது. இதனால், மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
வரத்து அதிகரிப்பே காரணம்: வெளி மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரிகள் அளவுக்கு அதிகமாக கரும்புகளை இறக்குமதி செய்யப்பட்டதால் விலை வீழ்ச்சியடைந்ததாக கூறும் உள்ளூா் வியாபாரிகள், நிகழாண்டு கொள்முதல் செய்யப்பட்ட தொகையை கூட எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கரும்பை விவசாயிகளிடம் திரும்பவும் கொடுக்க முடியாது. இதனால், தங்களுடைய பணத்தை கொடுக்க வேண்டியுள்ளது. நிகழாண்டை பொறுத்தவரை கரும்பு மற்றும் மஞ்சள் வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனா்.