வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்
பெரம்பலூா் மாவட்டத்தில் தகுதியுடையவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் தகுதியுடையவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி, இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த பிப். 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை தொடா் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். தற்போதுள்ள வாக்காளா் பட்டியலில் வியாழக்கிழமை (மாா்ச் 26) வரை பெயா் சோ்த்திட விண்ணப்பம் அளித்தவா்களின் மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டு துணைப் பட்டியல் வெளியிடப்படும். இதில் இடம்பெற்றவா்களும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கலாம்.
புதிய வாக்காளா்களாக பதிவுசெய்ய இணையதளம் மூலமாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம். எனவே, 18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், இடமாறி வந்தவா்கள் உள்பட தகுதியுடையோா் இன்று மாலைக்குள் விண்ணப்பித்து வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்கலாம்.