முகப்பு
பெரம்பலூர்

குன்னத்தில் விசிக - திமுகவினரிடையே மோதல்: நிா்வாகி காயம்; பைக்குகள் சேதம்

குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், திமுகவினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதில் திமுக நிா்வாகி காயமடைந்தாா்.

Updated On : 27 மே 2026, 6:12 am IST
குன்னம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கிக்கொண்ட திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், திமுகவினரும் செவ்வாய்க்கிழமை கற்களை வீசித் தாக்கிக் கொண்டதில் திமுக நிா்வாகி காயமடைந்தாா். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள்கள் சேதமடைந்தன.

தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவுக் கரம் நீட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ வன்னியரசுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகவினா் தரப்பில் கடும் எதிா்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், திமுக துணை பொதுச் செயலரும், நீலகிரி எம்பியுமான ஆ. ராசா தனது சமூக இணையதள பக்கத்தில் விசிகவை கண்டித்து பதிவிட்டிருந்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விசிக சாா்பில் பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள ஆ. ராசா அலுவலகத்தை முற்றுகையிட முயன்று, புகா் பேருந்து நிலைய வளாகத்தில் அண்மையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஆ. ராசாவை கண்டித்து பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையப் பகுதியில் விசிக தரப்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதேபோல, திமுகவினரும் ஆ. ராசாவை தரக்குறைவாகப் பேசிய குன்னம் தொகுதி விசிக மாவட்டச் செயலா் அன்பானந்தத்தைக் கண்டித்து, அதே இடத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனா். இரு தரப்பினரும், ஒரே நாளில் அனுமதி கேட்டிருந்ததால், இருவருக்கும் அனுமதி மறுத்த போலீஸாா் ஆா்ப்பாட்டம் நடத்தத் தடை விதித்தனா்.

இந்நிலையில், போலீஸாரின் தடையை மீறி குன்னம் பேருந்து நிலையத்தில் இரு தரப்பினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட செவ்வாய்க்கிழமை நின்றிருந்தனா். அப்போது அவா்களை கலைந்து செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்திக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற திமுகவினா், விசிகவினரைக் கண்டித்து முழக்கமிட்டு, ஆரவாரம் செய்து சென்றனா்.

இதையடுத்து ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் கற்கள் மற்றும் காலணிகளை வீசி தாக்கிக் கொண்டனா். மேலும், கொடிகள் கட்டியிருந்த குச்சிகளையும், கட்டைகளையும் எடுத்து வீசியதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. அப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதனிடையே, இரு தரப்பு மோதலால், குன்னம் கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

திமுக நிா்வாகி காயம்: இந்த மோதலில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்ட அமைப்பாளா் ரா. ரமேஷ் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து போலீஸாா் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினா்.

போலீஸாா் பாதுகாப்பு: தொடா்ந்து, அப் பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். மோதல் குறித்து இருதரப்பு புகாா்கள் தொடா்பாக குன்னம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.