முகப்பு
தமிழ்நாடு

குன்னத்தில் திமுக, விசிக மோதல்!

திமுக மற்றும் விசிக இடையிலான மோதல் குறித்து...

குன்னத்தில் திமுக, விசிக மோதல்! - படம்: தினமணி
பகிர்:

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், திமுகவினரும் கற்களை வீசித் தாக்கி மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஆதரவு தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னி அரசுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி அண்மையில் வழங்கப்பட்டது.

இதற்கு திமுகவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா, தனது சமூக இணையதளப் பக்கத்தில், " என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு"! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?" என்றும், அதனைத் தொடர்ந்து "முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி — புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் 'காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!" எனப் பதிவிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

இதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஆ. ராசாவை கண்டித்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விசிக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

அதேபோல, திமுகவினரும் ஆ. ராசாவை தரக்குறைவாக பேசிய குன்னம் தொகுதி விசிக மாவட்டச் செயலர் அன்பானந்தத்தைக் கண்டித்து அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக இளைஞரணி சார்பில் அனுமதி கேட்டிருந்தனர். இரு தரப்பினரும் அனுமதி கேட்டிருந்ததால், இருவருக்கும் அனுமதி மறுத்த போலீஸார், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், போலீஸாரின் தடையை மீறி இரு தரப்பினரும் செவ்வாய்க்கிழமை எதிரெதிர் திசையில் நின்றிருந்தனர். அப்போது, இரு தரப்பினரையும் போலீஸார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், திமுகவினர் இருசக்கர வாகனத்தில் முழக்கமிட்டவாறு ஆரவாரம் செய்துகொண்டு சென்றதால், இரு தரப்பினருக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

அப்போது, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், கற்களையும், கட்டைகளையும் எடுத்து வீசிக்கொண்டதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி, கலைந்து போகச் செய்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், குன்னம் கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும், குன்னத்தில் பலத்த பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

summary

An incident in the Kunnam bus stand area of ​​Perambalur district in which members of the Viduthalai Chiruthaigal Katchi and the DMK clashed by pelting stones at each other has created a sensation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.