முகப்பு
புதுக்கோட்டை

67 ஆண்டுகளாகியும் நிறைவேறாத காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம்

காவிரியின் உபரிநீரை புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் தீட்டப்பட்ட திட்டங்கள் கடந்த 67 வருட போராட்டங்களுக்குப் பிறகும் நிறைவேறாத நிலையிலேயே உள்ளன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:55 AM
பகிர்:

காவிரியின் உபரிநீரை புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் தீட்டப்பட்ட திட்டங்கள் கடந்த 67 வருட போராட்டங்களுக்குப் பிறகும் நிறைவேறாத நிலையிலேயே உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தின் மொத்த விவசாயப் பரப்பு சுமார் 1.40 லட்சம் ஹெக்டேரில், 11,200 ஹெக்டேர் மட்டுமே காவிரி பாசனப் பகுதி. மீதமுள்ள 90% விவசாய நிலங்கள் மழை மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளன. இதனால், புதுகை வறட்சி மாவட்டமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 1932-இல் புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாக அதிகாரியாக இருந்த அலெக்சாண்டர் டாட்டன்ஹாம் ஒரு திட்டத்தை வகுத்தார்.

இதில், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் வரையுள்ள அக்னி ஆறு, வெள்ளாறு, பாம்பாறு, குண்டாறு, நசுவினி ஆறு, கோரையாறு போன்ற காட்டாறுகளில் காவிரி உபரி நீரைத் திருப்பிவிட்டு, அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கண்மாய்களில் நீரைத் தேக்கி இந்தப் பகுதியில் பாசன வசதி அளிக்கத் திட்டமிடப்பட்டது.

1975-இல் திட்டக் குழுத் தலைவராக இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி. ராமையாவின் முயற்சியால் இந்தத் திட்டம் மறு ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, அன்றைய நிலையில் ரூ. 100 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதையடுத்து, 1981-இல் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த அன்பரசன் (அதிமுக), பெரியண்ணன் (திமுக), கே.ஆர். சுப்பையா (இந்திய.கம்யூ), என். சுந்தர்ராஜ் (காங்), விஜயரகுநாதபல்லவராயர், ஜி.எஸ். தனபதி ஆகியோரைக் கொண்ட காவிரி இணைப்புத் திட்ட பாசனக் குழு என்ற மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் சார்பில் 1982-இல் காவிரி இணைப்பு மாநாடு நடத்தப்பட்டு, அதன் தீர்மானம் அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆரிடம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுப் பணித் துறையினர் 3 ஆண்டுகள் மறு ஆய்வு செய்து, 1985-இல் ரூ. 188 கோடி செலவாகும் என அரசுக்கு அறிக்கை அளித்தனர். ஆனால், திட்டம் நிறைவேறவில்லை.

இதையடுத்து, பவானி, நொய்யல், அமராவதி, குடகனாறு, கோரையாறுகளின் உபரி நீர் காவிரியில் பாய்ந்தோடி கொள்ளிடம் மூலம் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, புதுகை மாவட்டத்துக்கு திருப்பிவிடலாம் என 1989-இல் முதல்வராக இருந்த கருணாநிதியிடம் காவிரி இணைப்புத் திட்டக் குழுவினர் வலியுறுத்தினர். அப்போது, காவிரி நதிநீர் பிரச்னை நீதிமன்றத்தில் இருந்ததால், அவரது யோசனைப்படி, கொள்ளிடம் நீரைத் திருப்பிவிட 1997-இல் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்தத் திட்டம் ஆய்வு செய்யப்பட்டு, ரூ. 125 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், இதுவும் நிறைவேறவில்லை.

இந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் (2006-11) கொள்ளிடம் உபரி நீர்த் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 1,225 கோடிக்கு திட்ட அறிக்கை அளிக்கப்பட்டது. அதில், முதல் கட்டமாக ரூ. 294 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ. 163 கோடியில் படுக்கை அணை கட்டப்பட்டதுடன் இத்திட்டம் நின்று போனது.

இதையடுத்து, முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் சுமார் 172 கி.மீ. நீளமுள்ள காவிரி, கட்டளைக்கால்வாய், வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்தார். இதற்காக, சுமார் ரூ. 5,187 கோடி செலவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், காவிரி உபரிநீர் கொள்ளிடத்தின் வழியாக கடலில் கலந்து வீணாகி வருவது, வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி கூறியதாவது:

புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய குடியரசில் இணைந்ததிலிருந்து இன்று வரை காவிரி நீரை புதுகை மாவட்டத்துக்கு கொண்டு வரும் முயற்சி பலிக்கவில்லை. இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். இது நிறைவேறினால், சுமார் 1.50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை வட்டாரத்தினர் கூறுகையில், காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முதல் கட்டப் பணிகள் மாயனூரில் தொடங்கியுள்ளன. நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக உரிமையாளர்களை அணுகும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

எனினும், பொதுப் பணித் துறையினர் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி நிலங்களை கையகப்படுத்தத் தயங்குவதும், அதுதொடர்பாக குழப்பத்தில் இருப்பதுமே இந்தத் திட்டம் தாமதமாகக் காரணம் என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →