தொழிலோ முந்திரி விற்பனை! வாழ்வோ சாலையோரம்!
புதுக்கோட்டை தஞ்சை சாலையில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியின் சாலை ஓரங்களில் முந்திரிப் பருப்பு விற்பனையை பல தலைமுறைகளாகக் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வரும் பலர் தொழிலை விரிவுபடுத்த அரசுடமை வங்கிகள் தங்களுக்கு கடனுதவி வழங்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
புதுக்கோட்டை தஞ்சை சாலையில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியின் சாலை ஓரங்களில் முந்திரிப் பருப்பு விற்பனையை பல தலைமுறைகளாகக் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வரும் பலர் தொழிலை விரிவுபடுத்த அரசுடமை வங்கிகள் தங்களுக்கு கடனுதவி வழங்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணத் தூண்டும் முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம சத்துகள், புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் தாவர வேதிப்பொருள்கள் அதிக அளவில் உள்ளன. மேலும், முந்திரி பருப்பில் இருதயத்துக்கு நன்மை பயக்கும் ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக், பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த கொழுப்பு அமிலங்கள், உடலுக்கு தீமை விளைவிக்கும் கொழுப்பைக் குறைத்து நன்மை தரக்கூடிய கொழுப்பை அதிகரிக்கச் செய்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதய நோயைத் தடுக்க உதவுவதாக அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது என்றும், பேண்டோதெனிக் அமிலம் (வைட்டமின் பி-5), பைரிடாக்சின் (வைட்டமின் பி-6), ரிபோபிலாவின், தையமின் (வைட்டமின் பி-1) போன்ற அத்தியாவசிய வைட்டமின் சத்துக்கள் அதிக அளவில் உள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்க மாவட்டத் தலைவர் எம். பெரியசாமி தெரிவித்தார்.
இத்தகைய மருத்துவ குணம் கொண்ட முந்திரி பருப்பை வறுத்து விற்பதை குடிசைத் தொழிலாகக் கொண்டு ஆதனக்கோட்டை பகுதி சாலையோரங்களில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து முந்திரி பருப்பு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் முத்துக்குமார் கூறியது:
தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் கேரள மாநிலம் ஆகிய இடங்களில் இருந்து முந்திரிக்கொட்டை (விதை) கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டு, மூன்று கைகள் மாறி நாங்கள் நான்காவதாகவே கொள்முதல் செய்யமுடிகிறது. 80 கிலோ கொண்ட முந்திரிக்கொட்டை மூட்டை ரூ. 8,500-க்கு வாங்குகிறோம். சிலர் 20 கிலோ, 50 கிலோ என்ற அளவிலும் வாங்கி வியாபாரம் செய்கின்றனர்.
பல்வேறு தொழிலாளர்களுக்கு கூலி முறையில் வேலை கொடுத்து சேர்க்கும் முந்திரி பருப்பை புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சையில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக விற்பனைக்கு கொடுக்கிறோம்.
முந்திரிக்கொட்டையை அனலில் வறுத்து பருப்பாக மாற்றும் தொழிலில் பெண்கள் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். முந்திரிக்கொட்டையை முறையாகப் பக்குவப்படுத்திய பிறகு வறுத்து எண்ணெய் சேர்ந்துவிடாமல் எடுத்து தருவதால், நாங்கள் விற்கும் முந்திரிபருப்பு உடல்நலத்துக்கு தீங்கு இல்லாமல் இருக்கும். இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டில் இந்த ஆதனக்கோட்டை (முந்திரி) என்று ஆங்கிலத்தில் உள்ளது. அதனால், வெளிநாட்டவர்கள் இந்த வழியாகச் செல்லும்போது மறக்காமல் முந்திரிபருப்பை வாங்கிச் செல்கின்றனர்.
சாலையோரம் தொழில் செய்து வரும் எங்களுக்கு, "கையால் வறுத்து உடைத்த முந்திரி பருப்பு- குடிசைத் தொழில்' என கடந்த ஜூலை 2015-ல் மாவட்ட தொழில்மையம் சான்று வழங்கி உள்ளது.
எங்களுக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்ட தொழில்மைய அதிகாரிகள், 60 பேரும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் உடைக்கும் இயந்திரம், சூடாக்கும் இயந்திரம், பேக்கிங் இயந்திரம் ஆகியவை கொண்ட தனி தொழிற்சாலையை அமைக்கலாம் எனவும், அதற்கு ரூ. 1 கோடி ஆகும், அதற்கான முன்பணம் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். அதற்கான விலைப்பட்டியலையும் தரவேண்டுமென கூறினர்.
ஆனால், 10 பேரைத் தவிர, மற்றவர்கள் முன்பணம் செலுத்துவதற்கான தொகையை கொடுக்க முடியாத நிலையில் இருப்பதால் அதுவும் முடியாமல் போய்விட்டது என்றார் முத்துக்குமார்.
தொழிலாளி முத்துக்கண்ணு கூறுகையில், கடந்த 1 மாதத்துக்கு முன்பு எங்களில் சுமார் 50 பேருக்கு ருத்ரா திட்டத்தின் மூலம் தலா ரூ. 50 ஆயிரம் கடனுதவி தருவதாக கூறினர். ஆனால், ஆதனக்கோட்டையில் ஒரு தனியார் வங்கி மட்டுமே உள்ளது. அதில், சுமார் 5 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் மட்டுமே கடன் தருவதாகக் கூறினர். இதனால், எங்களுக்கு பெரிய பயன் இருக்காது. அரசுடமை வங்கிகளில் கடனுதவி கிடைத்தால் இந்தத் தொழிலை மேம்படுத்த முடியும். 10,000 கிலோ முந்திரிக்கொட்டையை மொத்தமாகக் கொள்முதல் செய்து 50 பேருக்கு பகிர்ந்தளித்து அதிக லாபம் ஈட்ட முடியும்.
எங்கள் குடும்பத்தினர் படிக்கவைக்க சிரமப்பட்டதால், நாங்கள் இந்தத் தொழிலுக்கு வந்தோம். சாலையோரமே எங்கள் வாழ்வாதாரமாக மாறிவிட்டது. அரசின் தாராள வங்கிக் கடனுதவி அனைவருக்கும் கிடைத்தால், அடுத்த தலைமுறையினரை நல்ல நிலைக்குக் கொண்டுவர முடியும் என்றார்.