முகப்பு
புதுக்கோட்டை

"நிலவேம்பு கசாயம் அருந்தும் நாளில் சைவ உணவு நல்லது'

நிலவேம்புக் கசாயம் குடிக்கும்போது சைவ உணவு நல்லது  என்றார் அரிமளம் அரசு சித்த  மருத்துவ அலுவலர் ராஜேந்திரன்.

Updated On : 7 ஆகஸ்ட், 2017 at 7:47 AM
பகிர்:

நிலவேம்புக் கசாயம் குடிக்கும்போது சைவ உணவு நல்லது  என்றார் அரிமளம் அரசு சித்த  மருத்துவ அலுவலர் ராஜேந்திரன்.
 புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சி.  மீனா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற  சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  நில வேம்புக் கசாயம் வழங்கி மேலும் அவர் பேசியது:
 நிலவேம்புக் கசாயத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. அல்லது காலை உணவை எடுத்துக் கொண்ட பிறகு அருந்த நேரிட்டால் உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து அருந்தலாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 30 மில்லியும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் 50 மில்லியும் அருந்தலாம்.  கசாயம் அருந்திய பிறகு எளிதில் ஜீரணிக்கக் கூடிய  கஞ்சி போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது .    கசாயம் அருந்திய பிறகு அரை மணி அல்லது ஒரு மணி நேரத்திற்கு பிறகு வழக்கமான உணவுகளைச் சாப்பிடலாம்.  கசாயம் அருந்திய நாளில் பத்தியம்  ஏதும் கிடையாது.  ஆனால் கசாயத்தின் மருந்துவக் குணம் முழுவதையும் உடல் அடைவதற்கு , கசாயம் அருந்திய நாளில் எளிதில் ஜீரணிக்கக்  கூடிய சைவ உணவுகளை சாப்பிடுவது நல்லது.  எனவே  கசாயம் அருந்திய நாட்களில் அசைவ உணவுகள், முட்டை, பிராய்லர் கோழிக்கறி, பாகற்காய், அகத்திக் கீரை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இயங்கிவரும் சித்த மருத்துவ பிரிவுகளில்  நிலவேம்புக் கசாயம் காலை 9 மணிக்கு இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.  இந்தக் கசாயத்தை  யார் வேண்டுமானாலும் வந்து அருந்திச்  செல்லலாம்.   டெங்கு காய்ச்சல் கண்டவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று நிலவேம்புக் கசாயம், பப்பாளிச்சாறு,  மலைவேம்புக் கசாயம் ஆகிய சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும்.   இந்தக் கசாயம் டெங்கு காய்ச்சலை மட்டுமல்லாது  உடலில் சர்க்கரையின் அளவு,  ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை,  மலச்சிக்கல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக் கூடியது.  எனவே காய்ச்சல் இல்லாதவர்களும் நிலவேம்புக் கசாயத்தை பருகிப் பயன் பெறலாம் என்றார்.
  மருந்தாளுநர் சி. சுப்பையா, பணியாளர்கள்  கசாயத்தை  மாணவ மாணவிகளுக்கு விநியோகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.