கந்தர்வகோட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம்
கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையை அடுத்த தொண்டைமான் ஊரணியில் மக்கள் தொடர்பு முகாம் சார் ஆட்சியர் சரயு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையை அடுத்த தொண்டைமான் ஊரணியில் மக்கள் தொடர்பு முகாம் சார் ஆட்சியர் சரயு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, திருமண உதவித்தொகை, சிறு குறு விவசாயி அட்டை, விதவைச்சான்று, வாரிசு சான்று, பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளை 69 பயனாளிகளுக்கு வழங்கி சார் ஆட்சியர் பேசியது:
பெண்களை குறைந்தது பட்டப்படிப்பு படிக்க வைத்து பெண் கல்வியை ஊக்குவிக்க வெண்டும். 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் மானியம் பெற்று கழிப்பறை கட்டி பயன்படுத்த வேண்டும் என்றார். முகாமில் வட்டாட்சியர் தமிழ்மணி, மண்டலத் துணை வட்டாட்சியர் முருகப்பன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மனோரமா, வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், வாராப்பூர் வருவாய் ஆய்வாளர் சாந்தி, மாவட்டக் கல்வி
அலுவலர் சத்தியமூர்த்தி, வேளாண் அலுவலர் மதியழகன், உதவி வேளான் அலுவலர் சரவணன், மருத்துவர் விஜய், விஏஓக்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 40 மனுக்களில் குடிநீர் வழங்காதது சம்பந்தமாக அதிக மனுக்கள் வந்தன. ராஜாபகதூர் இந்திராநகர், அண்ணாநகர், உட்காட்டுப்பட்டி, வடக்குத்தொண்டைமான் ஊரணி, பாலடியான்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 15 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவிட்டார்.
முகாம் முடிந்த பின்னர் அருகிலிருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்ற சார் ஆட்சியர் மாணவர்களின் கற்றல் திறன்களை ஆய்வு செய்து பாராட்டினார்.