விராலிமலை பகுதி கல்வி அலுவலகங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு
விராலிமலை வட்டார வள மையம், பகல்நேர பாதுகாப்பு மையம் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் புதுக்கோட்டை
விராலிமலை வட்டார வள மையம், பகல்நேர பாதுகாப்பு மையம் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வனஜா புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், விராலிமலையில் செயல்பட்டு வரும் வட்டார வள மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வனஜா முன்னறிவிப்பின்றி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி இடம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, வளாகத் தூய்மை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தி அறிவுரைகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து, ஆசிரிய பயிற்றுநர்களின் நகர்வுப் பதிவேட்டினை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் நகர்வுப் பதிவேட்டில் குறிப்பிட்டபடி பள்ளிப்பார்வைக்கு சென்றிருக்கிறார்களா என ஆய்வு செய்தார்.
பின்னர், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல்நேர பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தி, மாற்றுத் திறன் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆசிரியை, உதவியாளர் மற்றும் உடலியக்க நிபுணர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு உடன் இருந்தார்.