முத்து மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
பொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற காரையூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு பூச்சொரிதல் விழாவில் காரையூர், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்கள், பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து அம்மனுக்கு மலர் சாத்தி வழிபட்டனர். விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.
விராலிமலை : அன்னவாசல் அருகே வயலோகம் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
நிகழாண்டுக்கான வைகாசி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. வயலோகத்தை சுற்றியுள்ள குடுமியான்மலை, குளவாய்ப் பட்டி, காட்டுப் பட்டி, புதூர், அகரப்பட்டி, தச்சம்பட்டி, முதலிப்பட்டி, விசலூர், மாங்குடி, புல்வயல், மண்வேளாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பூக்களை சேகரித்து ஊர்வலமாகவும், சிலர் பூக்களை தட்டுகளில் ஏந்தியும் கோயிலுக்கு சென்று சாத்தி வழிபட்டனர்.
வருகிற மே27ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
விருத்தபுரீஸ்வரர் வீதியுலா : ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட திருப்புனவாசல் அருள்மிகு விருத்தபுரீஸ்வரர்
திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாம் நாள் திருவிழாவான திங்கள்கிழமை அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் பஞ்சமூர்த்தியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.