விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்
விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விராலிமலையில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் உள்ள சன்னதி கொடி மண்டபத்தில் கொடியேற்றப்பட்டது.
பத்து நாள்கள் தொடர்ந்து நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் மயில், நாகம், சிம்மம், பூத வாகனம், வெள்ளிக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
முக்கிய நிகழ்வான வைகாசி விசாகத் தேரோட்டம் வருகிற மே 28ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் (மே 29) தெப்பத் தேர் உலா நடைபெறுகிறது. விழா நாள்களில் தினந்தோறும் மாலை வேளையில் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, சொல்லரங்கம் நடைபெறும். ஏற்பாடுகளை புதுக்கோட்டை திருக்கோயில் செயல் அலுவலர் எஸ். ராமராஜா, உதவி ஆணையர் ம.ரமேஷ், ஆய்வர் மெ.லட்சுமணன், மேற்பார்வையாளர் ரெ.மாரிமுத்து உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.