புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்
அன்னவாசல் அருகே புதிய தமிழகம் கட்சி பேனரில் இருந்த இமானுவேல் சேகரன் படத்திற்கு செருப்பு மாலை
அன்னவாசல் அருகே புதிய தமிழகம் கட்சி பேனரில் இருந்த இமானுவேல் சேகரன் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்களைக் கைது செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுகை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த இமானுவேல் சேகரன் படத்துக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்துச் சென்றது தெரியவந்தது. இதையறிந்த புதிய தமிழகம் கட்சியினர் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து, அந்த பேனருக்கு பாலாபிஷேகம் செய்த புதிய தமிழகம் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏதும் அசம்பாவிதம் நடக்காத வகையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.