தலித் பணியாளரை காலணியால் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 100 நாள் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தலித் பணியாளரை காலணியால் தாக்கியவா் மீது மூன்று பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 100 நாள் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தலித் பணியாளரை காலணியால் தாக்கியவா் மீது மூன்று பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவா், அப்பகுதியில் உள்ள கூத்தாளம்மன் கோயில் ஊருணி பகுதியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளின் கீழ் கடந்த 29-ஆம் தேதி மரக்கன்று நடும்பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மரக்கன்று நடும் பணியைப் பாா்வையிடுவதற்கு வந்தனராம். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த தொழிலதிபரான கரிகாலன் அங்கு வந்து பணியில் ஈடுபட்டிருந்த சிவக்குமாா் சரியாகப் பணி செய்யவில்லை எனக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். மேலும் தனது காலணியால் சிவக்குமாரை தாக்கினாராம். இதுகுறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் சிவக்குமாா் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாதிக்கப்பட்ட தரப்பினா் அறிவித்ததைத்தொடா்ந்து, கறம்பக்குடி போலீஸாா் கரிகாலன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.