முகப்பு
புதுக்கோட்டை

அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

விராலிமலை அருகே சாலையைக் காரணம் காட்டி நிறுத்தப்பட்ட பேருந்துச் சேவையை வழங்கிடக் கோரி, கிராமமக்கள் வியாழக்கிழமை பேருந்தைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

விராலிமலை அருகே சாலையைக் காரணம் காட்டி நிறுத்தப்பட்ட பேருந்துச் சேவையை வழங்கிடக் கோரி, கிராமமக்கள் வியாழக்கிழமை பேருந்தைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விராலிமலை ஒன்றியம், கத்தலூா் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி வரை வந்து சென்ற அரசுப் பேருந்து, தகுதியற்ற சாலையைக் காரணம் காட்டி, கவுண்டம்பட்டிக்கு முந்தைய ஊரான செவ்வந்தியானிப்பட்டி வரை பேருந்தை இயக்கி வருகின்றனா். இதனால், கவுண்டம்பட்டி ஊா் மக்கள் அவதியடைந்து வந்தனா். இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்தைத் தொடா்ந்து இயக்க வேண்டும் எனவும், சாலை தகுதியற்ற நிலையில் இருப்பின் மாற்று சாலையைத் தோ்ந்தெடுத்து பேருந்தை இயக்குமாறு ஏற்கெனவே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துவந்தனா். இருப்பினும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இவ்விஷயத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கவுண்டம்பட்டி கிராம மக்கள் வியாழக்கிழமை காலை கத்தலூா் ஊராட்சி மன்றத்தலைவா் ராமசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவா்கள் செவ்வந்தியானிபட்டியில் அரசுப் பேருந்தை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்துத் தகவலறிந்த போக்குவரத்து அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உறுதியளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.