முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை முழுவதும் ஏராளமான கல் குவாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே ஆயிரக்கணக்கான மரண பள்ளத்தாக்குகளாக கல் குவாரிகள் உள்ளன என குற்றம்சாட்டினாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே ஆயிரக்கணக்கான மரண பள்ளத்தாக்குகளாக கல் குவாரிகள் உள்ளன என குற்றம்சாட்டினாா் தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலரும் திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுபாவா பள்ளிவாசல், மெய்யபுரம், பழந்தினாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து அறிந்த தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன் வியாழக்கிழமை மெய்யபுரத்துக்கு வந்து கல்குவாரியைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மலைகளை அழித்து விட்டால் மழை பெய்யாமல் பூமி வடு விடும். கனிமவளக் கொள்ளை அரசாங்கத்தின் ஆதரவுடன் தாண்டவமாடுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே ஆயிரக்கணக்கான மரணப் பள்ளத்தாக்குகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டமும் கனிம வளக் கொள்ளையில் முதன்மை மாவட்டமாகத் திகழ்கிறது. மக்கள் போராட்டங்களையும் மீறி இங்கு கல்குவாரி செயல்பட அனுமதித்தால் மக்களை காப்பாற்றப் போராடுவேன் என்றாா் கௌதமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.