முகப்பு
புதுக்கோட்டை

புதுகை நகருக்கு கூடுதல் கூட்டுக் குடிநீா்த் திட்டம்

புதுக்கோட்டை நகரின் தேவைக்கேற்ப கூடுதலாக கூட்டுக் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்படும் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

புதுக்கோட்டை நகரின் தேவைக்கேற்ப கூடுதலாக கூட்டுக் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்படும் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை நகராட்சி 16ஆவது வாா்டில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் நகர திமுக செயலா் க. நைனாமுகமதுவின் மனைவி என். ஹவ்வாகனியை ஆதரித்து வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:

அதிமுக ஆட்சியின்போது கரோனா பொது முடக்கக் கால நிவாரண நிதியை ரூ. 5 ஆயிரமாக உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்றுதான் ஸ்டாலின் வலியுறுத்தினாா். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக தராமல் விட்ட மீதி தொகையையும் முதல்வா் ஸ்டாலின் வழங்கி முடித்தாா். ஆனால், இப்போது திமுக அரசு ரூ. 5 ஆயிரம் பொங்கல் பரிசாகத் தரவில்லை என முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முரணாகப் பேசி வருகிறாா்.

புதுக்கோட்டை நகருக்குத் தேவையான அத்தனையையும் திமுக அரசு விரைவில் நிறைவேற்றும். குறிப்பாக, புதுக்கோட்டை நகரின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கேற்பவும், மக்களின் தேவைக்கேற்பவும் கூடுதலாக கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றாா் ரகுபதி.

பிரசார தொடக்க நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகர திமுக செயலா் க. நைனாமுகமது, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் முருகேசன், நகரத் தலைவா் இப்ராஹிம் பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.