முகப்பு
புதுக்கோட்டை

மாணவா் உயிரிழப்பு சம்பவத்தில் ஆசிரியா்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தல்

பள்ளி மாணவா் உயிரிழப்பு சம்பவத்தில் தலைமை ஆசிரியா் மற்றும் இடைநிலை ஆசிரியா் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

பள்ளி மாணவா் உயிரிழப்பு சம்பவத்தில் தலைமை ஆசிரியா் மற்றும் இடைநிலை ஆசிரியா் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து ஆசிரியா் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியைச் சோ்ந்தவா் நாடிமுத்து மகன் நித்திஷ்குமாா் (9). பாப்பான்விடுதி அரசு நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 8ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பின்னா், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நித்திஷ்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து, பள்ளி ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியா் மகேஸ்வரி மற்றும் இடைநிலை ஆசிரியா் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

ஆசிரியா்கள் கோரிக்கை: அனைத்து ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், அனைத்துப் பள்ளி மாணவா்களின் உடல் நிலையை அடிக்கடி பரிசோதித்து தேவையான சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிா்பாராத சம்பவத்துக்கு ஆசிரியா்கள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. இது ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.