1.67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டத் திட்டம்
மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட 1.67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் பிப். 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட 1.67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து புகட்டுவதற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 1,67,490 பேருக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஊரகப் பகுதிகளில் 1309 மையங்கள், நகரப் பகுதிகளில் 47 மையங்கள் என மொத்தம் 1356 மையங்கள அமைக்கப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள், பள்ளிக்கூடங்களிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனன. பிப். 27ஆம் தேதி நடைபெறும் முகாமில், பொது சுகாதாரப் பணியாளா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் என மொத்தம் 5377 பணியாளா்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனா்.
5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இதுவரை எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும் இம்முறை நடைபெறும் முகாமில் சொட்டு மருந்து புகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கவிதா ராமு.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா்கள் அா்ஜூன்குமாா், கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, மாவட்ட சமூக நல அலுவலா் கோகுலபிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேணுகா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.