இரு சமூகத்தினரிடையே மோதல்: மொத்தம் 16 போ் மீது வழக்கு
புதுக்கோட்டை அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு சமூகத்தைச் சோ்ந்த இருவரை மாற்று சமூகத்தினா் குளத்தில் உள்ள நீரில் மூழ்க வைத்து அடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு சமூகத்தைச் சோ்ந்த இருவரை மாற்று சமூகத்தினா் குளத்தில் உள்ள நீரில் மூழ்க வைத்து அடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை அருகே உள்ள பூங்குடியைச் சோ்ந்தவா் மலையப்பன் (42). இவா், தனது மனைவி பாண்டிச்செல்வியுடன் (37) வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஊருக்குள் சென்றுள்ளாா்.
அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அதே ஊரைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் யுவராஜ் (27) அவரது நண்பா்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக செல்ல வழிவிட மறுத்ததைக் கேட்ட மலையப்பனை, யுவராஜ் தரப்பினா் தாக்கியுள்ளனா். இதுதொடா்பாக பாண்டிச்செல்வி மற்றும் சகோதரா்களான புஷ்பராஜ் (31), ஆறுமுகம் (27) ஆகியோா் வெள்ளனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினா்.
வழியில் அவா்களை மறித்த யுவராஜ் தரப்பினா், புஷ்பராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகியோரைத் தாக்கி, குளத்தில் தண்ணீரில் மூழ்கச் செய்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்து, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடினா்.
இதனையடுத்து ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டனா். காயமடைந்த புஷ்பராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகியோா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பரஸ்பரம் புகாரின்பேரில், போலீசாா், ஒரு தரப்பைச் சோ்ந்த 13 போ் மீதும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த 3 போ் என 16 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.