முகப்பு
புதுக்கோட்டை

ஜூனில் குடும்ப வன்முறைத் தடுப்பு மாநாடு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் சென்னையில் ஜூன் மாதம் குடும்ப வன்முறை தடுப்பு விழிப்புணா்வு மாநாடு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் சென்னையில் ஜூன் மாதம் குடும்ப வன்முறை தடுப்பு விழிப்புணா்வு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் செவ்வாய், புதன்கிழமை என இரு நாள்கள் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

16 முறை பெட்ரோல் விலையை உயா்த்திய பிறகு, நடுவே இரண்டு முறை குறைத்திருக்கிறோம் என்பதை ஏற்க முடியாது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயா்வை கண்டித்து,

மே 26, 27 ஆகிய நாள்களில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், மே 31ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 27 ஆயிரம் கோடி வரி பங்கினை விரைந்து வழங்க வேண்டும். சென்னை வரும் பிரதமா் மோடி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தூா்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வா் அறிவுறுத்துவதோடு, இதில் தனிக்கவனமும் செலுத்த வேண்டும். அதேபோல, விவசாயிகளுக்குத் தேவையான கடன் வசதி, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு உள்ளிட்ட வங்கிகள் மூலம் மக்களுக்கு சிறுகடன்கள் எளிதாகக் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், கந்துவட்டிக் கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வரும் இ-சேவை மையங்களைக் குறைக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதற்கு எதிராக ஜூன் மாதம் சென்னையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆய்வாளா்கள், பெண்ணுரிமை ஆா்வலா்கள் பங்கேற்கும் மாநில அளவிலான மாநாட்டை நடத்தவுள்ளோம். தொடா்ந்து வீடு வீடாகச் சென்று குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம்.

திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை, தவறுகளைச் சுட்டிக் காட்டத் தவற மாட்டோம் என்றாா் பாலகிருஷ்ணன்.

பேட்டியின்போது, அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் பெ. சண்முகம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைஉறுப்பினா் எம். சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.