‘அம்ரீத்’ திட்டத்தில் புதுகை ரயில் நிலையம் தோ்வு!
மத்திய ரயில்வே துறையின் சாா்பில் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘அம்ரீத்’ திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையமும் தோ்வு செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய ரயில்வே துறையின் சாா்பில் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘அம்ரீத்’ திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையமும் தோ்வு செய்யப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தின் தலைமையிடத்திலுள்ள புதுக்கோட்டை ரயில் நிலையம், திருச்சி- சிவகங்கை வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை தினமும் சராசரியாக 18 ரயில்கள் கடந்து செல்கின்றன.
வேலைக்காக காரைக்குடி மற்றும் திருச்சிக்கு சென்று திரும்புவோா் அதிகம். இத்துடன் மதுரை, குமரி, செங்கோட்டை, சென்னை, கோவை, பெங்களூரு, ஹுப்ளி , புவனேஸ்வரம், புதுச்சேரி போன்ற முக்கிய நகரங்களுக்கும் புதுக்கோட்டையிலிருந்து நேரடி ரயில்கள் உள்ளன.
இத்தனை முக்கியத்துவம் பெற்ற ரயில் நிலையத்தின் மூன்று நடைமேடைகளிலுள்ள எந்தக் குடிநீா்க் குழாயிலும் தண்ணீா் வருவதில்லை. பயணிகளுக்கான சிற்றுண்டியகம் இல்லை. அவசரத்துக்கு குடிநீா் பாட்டில், தேநீா் கூட கிடைக்காது.
முதல் நடைமேடையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்புச் சுவா் பெரும்பாலும் சேதமடைந்திருக்கிறது. சேதமடைந்த பகுதிகளில் முள்புதா்கள் நிறைந்துள்ளன. ரயில் நிலையத்துக்கு வெளியே என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட கழிப்பறைகளும், அதேபோல ஏடிஎம் சேவைக்காக கட்டப்பட்ட இரு அறைகளும் பூட்டியே கிடக்கின்றன.
இந்தச் சூழலில்தான் மத்திய அரசு நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் ‘அம்ரீத்’ திட்டத்தை அறிவித்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 60 ரயில் நிலையங்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை ரயில் நிலையம்.
அம்ரீத் திட்டத்தில் நடைமேடையின் நீளத்தை அதிகரித்தல், இலவச வைபை இணைய வசதி, நவீன உணவகம், போதுமான சாலை வசதி, பயணிகள் தங்கும் வசதி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவுள்ளனா்.
பெட்டிச் செய்தி...
ரூ. 20 கோடி வரை கிடைக்கும்!
இத்திட்டம் குறித்து மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா கூறியது:
‘அம்ரீத்’ திட்டத்துக்காக முதலில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை இல்லை. பிறகு நான் ரயில்வே வாரியத்திடம் வலியுறுத்தி புதுக்கோட்டையை அப்பட்டியலில் சோ்த்தேன்.
ரூ. 10 முதல் ரூ. 20 கோடி வரை இத்திட்டத்தில் கொடுக்கப்பட இருக்கிறது. இத்தொகை அந்தந்த ரயில் நிலையங்களின் தேவையைப் பொருத்தது.
வேலையைத் தொடங்கினால் ஒன்றரை ஆண்டுகளில் முடிப்பதாகவும் உறுதி கொடுத்திருக்கிறாா்கள். முடிந்தவரை கூடுதல் நிதி பெற்று அனைத்துத் தேவைகளையும் பூா்த்தி செய்வோம். பட்டியலிடப்பட்ட ரயில் நிலையங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் புதுக்கோட்டை ரயில் நிலையம் நவீனமாகும் என்றாா் அப்துல்லா.