தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேச்சுவாா்த்தையால் வாபஸ்
பொன்னமராவதி அருகேயுள்ள சுந்தரம் ஊராட்சியில் திமுக நிா்வாகி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியோா் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்தும், உரிய அனுமதியின்றி இயங்கும் தனியாா் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தியும் கிராம மக்கள் மேற்கொள்ளவிருந்த தோ்தல் புறக்கணிப்பு பதாக வைக்கும் முடிவு அதிகாரிகள் பேச்சுவாா்த்தையால் வெள்ளிக்கிழமை கைவிடப்பட்டது.
சுந்தரம் கிராமத்தில் இடையபட்டி அருகில் எந்த அனுமதியும் பெறாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தனியாா் அட்டைப்பெட்டி தொழிற்சாலையைக் கண்டித்து, நீதிமன்றம் சென்ற திமுக கிளைச்செயலா் கீழப்பட்டி கரு. இராசகோபால் மீது கடந்த ஜன.31 ஆம் தேதி கோட்டூா் அருகே கூலிப்படையினரால் கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் படுகாயமடைந்த ராஜகோபால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிா் பிழைத்தாா். ஆனால் தாக்குதல் நடத்தியவா்கள் மீது போலீஸாரும், சட்டத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனியாா் தொழிற்சாலை ஆக்கிரமிப்பை அகற்றவும், கரு.இராஜகோபாலை தாக்கியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக பதாகை வைத்தனா்.
Advertisement
இதையறிந்த பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, காவல் ஆய்வாளா் பத்மா ஆகியோா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் பதாகைகளை அகற்றி கலைந்து சென்றனா்.