முகப்பு
புதுக்கோட்டை

குடிநீா் விநியோக ஏற்பாடுகள்: புதுகை ஆட்சியா் ஆய்வு

Updated On : 3 மே, 2024 at 6:23 PM
பகிர்:

புதுக்கோட்டை, மே 3: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோடைக்கால குடிநீா் விநியோகப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வெள்ளிக்கிழமை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பைவிடவும் அதிக வெயில் அடித்து வருவதால் நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.

காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் இருந்து பெறப்படும் குடிநீா், நகராட்சி உள்ளிட்ட சில பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீராதாரங்கள் மூலம் கிராமக் குடிநீா்த் தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஊரக பகுதிகளில் குடிநீா் வழங்குதல் உள்ளிட்ட இதர வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்துப் பேசும்போது, கோடைகாலத்தில் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் பரமசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.