காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை
காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்ட விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து அதன் மாநிலச் செயலா் அா்ச்சுனன் கூறியது, இணைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் முடிந்தும், கரூா் மாவட்ட எல்லைக்குள் 4.1 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஒப்பந்தப்புள்ளியும், புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஒப்பந்தப்புள்ளியும் மட்டுமே முடிவாகியுள்ளன.
இரு பாலங்கள் அமைப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறையின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. முதல் கட்டப் பணிகளிலேயே இத்தனை தொய்வு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் விரைந்து இந்தப் பணிகளை விரைவுபடுத்தி, கூடுதல் நிதி ஒதுக்கி, பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மலா் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதற்காக தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டம் தீட்ட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் மிசா மாரிமுத்து தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.